NEWS UPDATE *** “மதுரை மாநாடு.. மக்கள் சந்திப்பு.. பயணம்.. என இதுக்கப்புறம் தொடர்ந்து மக்களோட மக்களா இருக்கப் போறோம்” தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேச்சு *** " அக்னி சிறகு " புலனாய்வு மாத இதழ் - RNI NO: TNTAM/2016/70165

திருச்சியில் சிஐடியு தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் !



திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக 80 வியாபாரிகள் தரைக்கடை, தள்ளு வண்டிகளில் பழங்கள், பூக்கடை டிபன் கடை போன்ற வியாபாரங்களை மாநகராட்சிக்கு குப்பை வரி செலுத்தி, எஃப்.எஸ். எஸ்.ஐ லைசன்ஸ் மற்றும் மாநகராட்சி மூலம் சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற்று வியாபாரம் செய்து வந்தனர். இதேபோன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் வாடகை கார் ஓட்டுனர்கள் மாநகராட்சி அனுமதி பெற்று தங்களுக்கான நிறுத்தங்களை அமைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்தியப்பேருந்து நிலையம் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் இங்கு வெளியூர் பேருந்துகள் முற்றிலும் வராததால் வருமானமின்றி பிழைக்க வழியின்றி 80 வியாபாரிகள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பரிதவித்து வருகிறார்கள். எனவே இவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், பிழைக்க வழி வகுக்கும் வகையில் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும்வாடகை கார் ஓட்டுநர்கள் தங்களுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி மண்டலம் 4 (பொன்மலை கோட்டம்) உதவி ஆணையரிடம் மனு கொடுக்க வந்தனர். அங்கு மனு வாங்க அதிகாரிகள் இல்லாததால் அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.




போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட தலைவர் கணேசன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், சி.ஐ. டி.யு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் சார்லஸ் ஆகியோர் பேசினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சண்முகம் உதவி ஆணையரின் உத்தரவின் பேரில் அனைவரும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து பதிலளிப்பதாக கூறினார். அதற்கு வரும் 7-ந் தேதிக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் 8-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு வினர் தெரிவித்தனர். மாநகராட்சி மண்டல முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Post a Comment

0 Comments